வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
உடுமலை, மடத்துக்குளம் வட்டார வேளாண்மைத்துறைகளின் மூலம் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கிராமத்தங்கல்
உடுமலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு தேனி மாவட்ட வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும், குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவர்களும் கிராமத் தங்கல் திட்டத்தில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளனர்.
இதில் முதல் கட்டமாக 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வேளாண்மைத்துறையின் கட்டமைப்பு, அடிப்படைப்புள்ளி விபரங்கள், தொடர்பு விவசாயிகள், உழவர் நண்பர்கள் குறித்த விபரங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அனைத்து இடுபொருட்கள், சான்று பெற்ற விதைகள், நுண்ணுயிரிகள், நுண்ணூட்ட உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
விதைப்பண்ணை
உடுமலை வட்டாரத்தில் செயல்பாட்டில் உள்ள தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றும் திட்டம், தென்னையில் வெள்ளை ஈக்களைக்கட்டுப்படுத்த கிரைசோபெர்லா ஒட்டுண்ணி வழங்குதல், தென்னையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பூச்சி நோய் மேலாண்மை, பண்ணைக் கருவிகள் வழங்கும் திட்டம், தார்பாலின், விசைத்தெளிப்பான் வழங்குதல், தென்னந்தோப்பு இல்லாத விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்குதல் போன்ற அனைத்து திட்டங்களும் விளக்கிக் கூறப்பட்டது.
3 மாதங்கள் உடுமலையில் தங்கி இருந்து பயிற்சி பெற உள்ள மாணவர்கள் விவசாயிகளிடம் சென்று நேரடியாக கற்றுக் கொள்ள உள்ளனர். மாணவர்கள் சாகுபடி முறைகளைக் கற்றுக் கொள்ளவும், விவசாயிகளை நேரடியாக அணுகும் முறைகளைக் கற்று விவசாயப் பணியில் திறம்பட செயலாற்றும் வகையில் 4 ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டமாக இந்த கிராமத் தங்கல் திட்டம் உள்ளதாக உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி தெரிவித்தார்.
நானோ யூவேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிரியா
இதுபோல தேனிமாவட்டம் வைகை அணை பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்பக்கல்லூரியில் இளங்கலை 4-ம் ஆண்டு விவசாயம் படிக்கும் மாணவர்கள் மடத்துக்குளம் வட்டாரத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
பயிற்சியின் போது பயிர்களுக்கு நானோ திரவ யூரியா இலை வழியாக தெளிக்கும் பணிகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
இலை வழியாக தெளிப்பதால் ஒரு மூட்டை யூரியாவை மண்ணில் இடுவதற்கு பதிலாக அரை லிட்டர் நானோ யூரியா திரவம் தெளித்தால் போதுமானது. இதன் மூலம் அதிகப்படியான வேதி உரங்கள் பயன்பாட்டை குறைத்து மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் பயிர் வளர்ச்சி ஒரே சீராக இருப்பதுடன் மகசூல் அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகளால் தெரியவந்துள்ளதாக மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.