கூலி ஆட்கள் பற்றாக்குறையால் கைகொடுக்கும் நேரடி நெல்விதைப்பு


கூலி ஆட்கள் பற்றாக்குறையால்   கைகொடுக்கும் நேரடி நெல்விதைப்பு
x
திருப்பூர்


உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காண நேரடி நெல் விதைப்பு கைகொடுத்து வரும் நிலையில் களைகளைக்கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதால் ஒருசில விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பாரம்பரிய முறை

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அமராவதி அணையை நீராதாரமாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்து வருவதால் அமராவதி அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாற்றங்கால் அமைத்தல், பாத்தி கட்டுதல், நடவு செய்தல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் பல விவசாயிகள் நமது பாரம்பரிய முறையான நேரடி நெல் விதைப்பு முறைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் இந்த முறையில் களைகளின் தாக்கம் அதிக அளவில் இருப்பதாகவும், அதனைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நாற்றங்கால் அமைத்து பயிர்களைப் பராமரிக்கவும், நாற்றுக்களைப் பிடுங்கி நடவு செய்யவும் அதிக அளவில் மனித சக்தி தேவைப்படுகிறது. ஆனால் இன்றைய நிலையில் அதிக கூலி கொடுத்தாலும் உரிய நேரத்தில் ஆட்கள் கிடைப்பதில்லை.நேரடி நெல் விதைப்பைப் பொறுத்தவரை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள் இருந்தால் போதும். நாற்று நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 30 கிலோ வரை நெல் விதைகள் தேவைப்படும். அதேநேரத்தில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும்போது இதில் பாதி அளவு விதைகள் போதுமானது.

மேலும் 10 முதல் 15 நாட்கள் முன்பாகவே அறுவடைக்குத் தயாராகி விடும் என்பதால் கன மழையில் சிக்கி வீணாகும் அபாயம் குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் நேரடி நெல் விதைப்பில் களைகளைக் கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாகவே உள்ளது.இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கிறது. எனவே நேரடி நெல் விதைப்பில் களைகளைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறையினர் வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

சீரான சத்துக்கள்

இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

இந்த முறையில் களைகளைக் கட்டுப்படுத்த களைக்கொல்லிகளை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். அத்துடன் நேரடி நெல் விதைப்பில் எந்திரங்களைப் பயன்படுத்தலாம். இதனால் பயிர்கள் சீரான இடைவெளியில் முளைப்பதால் களை எடுத்தல், பயிர் பாதுகாப்பு போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். பயிர்களுக்கிடையில் போதிய இடைவெளி இருப்பதால் களைகள் குறைவாகவே இருக்கும்.அத்துடன் பயிர் போட்டி குறைந்து பயிர்களுக்கு சீரான சத்துக்கள் கிடைப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும்.இவ்வாறு வேளாண்மைத்துறையினர் கூறினர்.


Next Story