7 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்


7 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்
x
திருப்பூர்

முத்தூர்

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 7 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன் கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முத்தூர் நகர சுற்றுவட்டார மற்றும் ஈரோடு, கரூர் மாவட்ட கிராமப்பகுதிகளில் கடந்த 2 வார காலமாக எள் அறுவடைநடைபெற்று வருகிறது. இதனால் முத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் எள் ஏலம் தொடங்கி நடத்திட தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேளாண் மற்றும் விற்பனை வணிகத்துறை மூலம் அனுமதி வழங்கியது.

7 டன் ஏலம்

இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 20 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.10.69 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.90.19- க்கும் ஏலம் விடப்பட்டது.

மேலும் 10 ஆயிரத்து 425 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.25-க்கும், ஏலம் விடப்பட்டது. மேலும் 46 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.83.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.69-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 7 டன் அளவில் மொத்தம் ரூ‌.3 லட்சத்து 54 ஆயிரத்து 375-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நேரில் வந்து கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.


Next Story