ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத்திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும். தினக்கூலியை மாநில அரசு தன்பங்காக ரூ.100 அளித்து ரூ.381 ஆக உயர்த்தி முழுமையாக வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நீடாமங்கலத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆனந்தமேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் ரவி, செயலாளர் முருகதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.