கம்பத்தில் பரபரப்பு: பெரியார் பிறந்தநாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் மறியல்: 20 பேர் கைது
கம்பத்தில் பெரியார் பிறந்தநாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியார் பிறந்தநாள்
தேனி மாவட்டம் கம்பத்தில், காந்தி சிலை முன்பு தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாட திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து காந்தி சிலை முன்பு திராவிட கழகத்தினர் பெரியாரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனரை இன்று காலை வைத்தனர். மேலும் கம்பம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதில் சனாதனம் அழியட்டும், சமதர்மம் மலரட்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் திராவிடர் கழகத்தினர் பெரியாரின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி அளிக்க கூடாது என்று கூறி, பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க.வினர் மறியல்
இதையடுத்து வ.உ.சி. திடல் பகுதியில் விழாவை கொண்டாடுமாறு திராவிடர் கழக நிர்வாகிகளிடம், இன்ஸ்பெக்டர் லாவண்யா கூறினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த திராவிடர் கழகம், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அனுமதி பெற்ற இடத்திலேயே பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்றனர்.
அப்போது பா.ஜ.க.வினர், திராவிட கழகத்தினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் பா.ஜ.க. வினரை கண்டித்து திராவிடர் கழகம், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அதே சாலையில் எதிரே நின்று மறியலில் ஈடுபட்டு பா.ஜ.க.வினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது.
20 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 20 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்துக்கு திராவிடர் கழகத்தினர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கம்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.