'அக்னி நட்சத்திரம்' இன்று ஆரம்பம்; வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகி வருகிற 29-ந்தேதி வரை 25 நாட்கள் இருக்கிறது.
சென்னை,
சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி, வைகாசி 14-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.
அதாவது இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, வருகிற 29-ந்தேதி முடிவடைகிறது. இந்த 25 நாட்களும் கத்திரி வெயில் காலத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும்.
வெளியே செல்வதை தவிர்க்கலாம்
அக்னி நட்சத்திர காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் பகல் பொழுதில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம். கோடை காலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்து செல்வது நல்லது என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், தமிழகத்தில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பததத்தின் அளவு கூடியிருப்பதாலும் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்து வருகிறது.
இருந்தாலும், அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதால் இந்த கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.