அகோரி சாமியாரை அழைத்து பூஜை செய்ததாக புகார்


அகோரி சாமியாரை அழைத்து பூஜை செய்ததாக புகார்
x

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நிர்வாண அகோரி சாமியாரை அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

திருப்பூர்

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நிர்வாண அகோரி சாமியாரை அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

காங்கயம் நகராட்சி அலுவலகம்

திராவிடர் விடுதலை கழகத்தின் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்ட தலைவர் முகில்ராசு, முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தெற்கு பகுதி பொறுப்பாளர் ராமசாமி உள்ளிட்டவர்கள் நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாயிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் ஆண், பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த அலுவலகத்தில் பூஜை செய்வதற்காக நிர்வாண அகோரியை அழைத்து வந்துள்ளனர். இதைப்பார்த்த அங்கிருந்த பெண் ஊழியர்கள் அலறியடித்து சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அரசியல் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதசார்பின்மைக்கு எதிராக அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தியது சட்டப்படி குற்றமாகும்.

அகோரி சாமியார்

இந்திய அரசியல் சட்டம் சொல்லும் மதசார்பின்மைக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு ஆணைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் இடத்தில் இவ்வாறு மதம் சார்ந்த நிர்வாண சாமியார்களை வைத்து பூஜை செய்வது வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. பெரியாரின் கொள்கையை முன்னெடுத்து ஆட்சி செய்யும் தி.மு.க. அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

எனவே அரசு அலுவலகத்துக்குள் நுழைந்த அகோரியையும், அதற்கு உறுதுணையாக இருந்த மாநகராட்சி ஆணையாளர், ஊழியர்கள் மற்றும் அழைத்து வந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Related Tags :
Next Story