ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்; விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்


ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்; விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
x

கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க செயலாளர் சுதந்திரராசு:-

சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான முகாம் குறித்த தகவல் முகாம் நடைபெறும் நாள் அன்று காலை 10 மணிக்குத்தான் தெரியப்படுத்தப்பட்டது. எனவே, குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்பாக பத்திரிகைகள் மூலமாக அறிவிப்பு செய்து தெரியப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீர் திறக்க வேண்டும்

கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அதே சமயம் நீர் தேவையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதற்கு முன்பாக உடனடியாக வாய்க்காலை தூர்வாரி, பழுதடைந்த மதகுகளைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பவானியில் உள்ள விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தில் விதை நெல்களை பாதுகாப்பாக வைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்பு

கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் செ. நல்லசாமி:-

தென்னையில் இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சுபவர்கள் யாரிடம் உரிமம் பெற வேண்டும் என தெளிவுபடுத்த வேண்டும். வேமாண்டம்பாளையம், அறச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை கொட்டி வருவதை தடுக்க வேண்டும்.

கீழ்பவானி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை தடுக்க கரையோரங்களில் பனை நடவு செய்வது எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க வழிவகை செய்யும்.

விலைப்பட்டியல்

மேட்டூர் வலதுகரை பாசன சங்கத் தலைவர் பழனிசாமி:-

பவானி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கான நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். உரவிலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உர விற்பனை கடைகளில் முறையாக விலைப்பட்டியல் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, பவானி நதி நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி:-

தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்.

கல்குவாரி

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் வி.பி.குணசேகரன்:-

ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பெஜலட்டி பகுதியில் மீண்டும் கல்குவாரி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வனம் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளும் ஏற்படும்.

ஜூன் மாதம் 5-ந்தேதி சுற்றுச் சூழல்தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மலை பகுதிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த ஆவன செய்யவேண்டும். தொட்டகோம்பை பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு வன உரிமை சட்டத்தின்படி நிலம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுங்கச்சாவடி

காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் குழந்தைவேலு:-

இந்த ஆண்டு வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுந்தப்பாடி ஓடத்துறை பாசன விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம்:-

கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரையில் அஸ்கா கலப்படம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். கவுந்தப்பாடி-கோபி இடையே சத்தி ரோட்டில் சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக தெரிகிறது. அதைக்கைவிட வேண்டும்.

கோமாரி நோய் தடுப்பூசி

பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜூ:-

பால் சேகரிப்பு மையங்களில் பாலின் அளவு, தரம் குறித்த புள்ளி விவரங்களை உடனடியாக அங்கேயே வழங்க வேண்டும். இதுகுறித்து ஆணையாளர் மற்றும் கோர்ட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பாதிப்புகளை தடுக்க உரிய காலத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story