தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்ட பப்பாளி விதைகள் போலியானவையா?


தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்ட பப்பாளி விதைகள் போலியானவையா?
x

தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்ட விதைகள் போலியானவை என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்

தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்ட விதைகள் போலியானவை என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகசூல் இழப்பு

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. தற்போது தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக காய்கறிகள் மற்றும் பப்பாளி, மா, கொய்யா போன்ற பழ வகைகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி நாற்றுகள் மற்றும் பழவகை கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்ட பப்பாளி விதைகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் விதைகளை விட முரண்பட்டு இருப்பதால் போலி விதைகளா? என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் தரமற்ற மக்காச்சோள விதைகளால் மகசூல் இழப்பு, பாகல் விதைகளால் வைரஸ் தாக்குதல், முருங்கை விதைகளால் இழப்பு என்ற பல குற்றச்சாட்டுகள் விவசாயிகளால் முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை குறிப்பு

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுசூதனன், ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது:-

'தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்ட விதை பாக்கெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் கைகளால் தேய்க்கும் போது அழிகிறது. மேலும் பாக்கெட்டில் உள்ள க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும்போது வெளிச்சந்தையில் வாங்கிய விதை பாக்கெட்டில் விதை குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதில் வேறுவிதமான எச்சரிக்கைக் குறிப்பு உள்ளது.

இது விவசாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த விதைகள் போலியாக, தரமற்றதாக இருக்கும் பட்சத்தில் அதனை விதைத்து விட்டு சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முறையான விசாரணை

இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'இந்த விதைகள் தோட்டக்கலைத்துறைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அவற்றை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்கவே அந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவை போலி விதைகளோ?, தரமற்ற விதைகளோ? இல்லை' என்றனர். தரமற்ற விதைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முறையான விசாரணை நடத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story