பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்- வேளாண் உதவி இயக்குனர்
சேதுபாவாசத்திரத்தில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
சேதுபாவாசத்திரம்:-
சேதுபாவாசத்திரத்தில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை உழவு
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளது. இது கோடை உழவிற்கு ஏற்ற நேரமாகும். அறுவடை செய்து ஈரப்பதத்துடன் தரிசாக கிடக்கும் நிலங்களை விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும். முதலில் வயலை இரும்பு கலப்பை அல்லது டிராக்டர் மூலமாக குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு கோடை உழவு மேற்கொள்வதால் புல்-பூண்டுகளின் வேர் அறுந்து கருகிவிடுகிறது.
பயிர் பருவகாலங்களில் சிலவகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுபுழுக்களாக மாறி வளர்ந்து கொண்டிருக்கும்.
பயிர் செழித்து வளரும்
கோடை உழவு செய்வதன் மூலம் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு அவை பறவைகளுக்கு உணவாகி அழிக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த பயிர் சாகுபடியின்போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது.
மண்ணின் நீர்பிடிப்பு தன்மை பெருகுகிறது. மண்ணின் பவுதீக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. உரம் சமச்சீராக கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன் பயிர் செழித்து வளர்கிறது.
கூடுதல் மகசூல்
இதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கும். அதே சமயம் மணல்சாரி, களர் மற்றும் உவர் நிலங்களில் கோடை உழவை தவிர்க்க வேண்டும். காரணம் கோடை உழவினால் மணல்சாரி நிலங்களில் ஈரத்தன்மை குறைகிறது. களர் மற்றும் உவர் நிலங்களில் நீர் ஆவியாகி விடுவதால் உப்புத்தன்மை ஏற்படும் அபாயம் வரும்.
தற்போது ஈரத்தை பயன்படுத்தி கோடை உழவு செய்ய தவறும் விவசாயிகள் எதிர்வரும் கோடை காலத்தில் பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வது நல்ல மகசூலை கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.