களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற நெல் ரகம்
களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்ற நெல் ரகம் குறித்து வேளாண்மை விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்
களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்ற நெல் ரகம் குறித்து வேளாண்மை விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி செல்வமுருகன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உப்பு பாதித்த நிலம்
திருவாரூர் மாவட்டத்தின் களர் மற்றும் உப்பு பாதித்த நிலங்களில், அதனை தாங்கி வளரக்கூடிய திருச்சி- 5 நெல் ரகத்தினை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெற வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் ஒன்றான அன்பில் தர்மலிங்கம் மேலாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட திருச்சி- 5 நெல் ரகமானது, களர் மற்றும் உவர் தன்மையை தாங்கி வளரக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த ரகமானது உப்பு பாசன நீரிலும், நன்கு வளரக்கூடிய தன்மையை கொண்டு விளங்குகின்றது. மேலும் இந்த ரகம் நல்ல, உப்புகளற்ற நிலங்களிலும் நன்கு வளரக்கூடியது.
குறுவை பருவம்
குறுவை பருவத்திற்கு ஏற்ற இந்த ரகமானது 110 முதல் 115 நாள் வயதுடையது ஆகும். இது உவர் தன்மையை தாங்கி வளரக்கூடிய கூடிய திருச்சி- 2 நெல் ரகத்திலிருந்து திடீர் மாற்ற இனப்பெருக்க முறைகளின் வாயிலாக உருவாக்கப்பட்ட ஒரு ரகமாகும்.
இது ஒரு எக்டருக்கு 5,100 கிலோ மகசூல் தரும். இந்த ரகம் திருச்சி- 2 நெல் ரகத்தைக் காட்டிலும் 12.64 சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியதாக விளங்குகின்றது. மேலும் இந்த ரகம் குலை நோய், பழுப்பு நிற, இலைப்புள்ளி நோய் போன்ற நோய்களுக்கும், பச்சை நிற தத்துப்பூச்சி, பழுப்பு நிற தத்துப்பூச்சி, வெள்ளை முதுகு தத்துப்பூச்சி போன்ற பூச்சிகளுக்கும் எதிர்ப்பு தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது.
திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை
இந்த ரகமானது நீண்ட, சன்ன, ஒட்டாத, குழையாத, நல்ல மனம் உடைய அரிசியை கொண்டதாகவும் விளங்குகிறது. ஆகவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்கள் உள்பட அனைத்து வட்டார களர் மற்றும் உவர் நில விவசாயிகள் அனைவரும், திருச்சி- 5 நெல் ரகத்தினை சாகுபடி செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.