வயலில் மண்வளத்தை கூட்டும் தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம்
நீடாமங்கலம் அருகே வயலில் மண் வளத்தை கூட்டும் தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீடாமங்கலம் அருகே வயலில் மண் வளத்தை கூட்டும் தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
செயல் விளக்க நிகழ்ச்சி
புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்பான பூசா சிதைப்பான் மற்றும் காஜியாபாத்தில் உள்ள இயற்கை வேளாண்மைக்கான தேசிய மையத்தின் என்காப் கழிவு சிதைப்பான் ஆகியவற்றை பயன்படுத்தி குறுவை நெல் அறுவடைக்கு பின்னர் வயலின் மண் வளத்தை கூட்டும் வகையில் வைக்கோலை வயலிலேயே மட்க செய்யும் தொழில்நுட்பம் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நீடாமங்கலம் அருகே கடம்பூர் கிராமத்தில் உள்ள ராஜா என்ற விவசாயியின் வயலில் நடந்தது.
இதில் நெல் அறுவடைக்கு பின்னர் மட்க செய்யும் நொதிக்க வைத்த நுண்ணுயிர் கலவையை டிரோன் மூலமாக தெளித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுனர் கருணாகரன் செயல் முறை விளக்கத்தை செய்து காண்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மண் வளம் மேம்படும்
நெல் அறுவடைக்குப்பின் மழை பெய்து வைக்கோலை பயன்படுத்த முடியாமல் மட்குவதற்கும் அதிக நாள் எடுத்துக்கொள்ளும். மேலும் சில விவசாயிகள் வைக்கோலை வயலிலேயே எரித்து விடுகின்றனர். அவ்வாறு செய்வதை தவிர்த்து கழிவு சிதைப்பான்களை பயன்படுத்தும்போது 15 முதல் 20 நாட்களில் வயலிலேயே வைக்கோல் மட்கி அங்கக உரமாக மாறி மண் வளத்தை மேம்படுத்துகிறது.
இந்த தொழில் நுட்பத்தை விவசாய பெருமக்கள் தங்கள் நெல் அறுவடை செய்த வயல்களில் பயன்படுத்தி மண் வளத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.