விவசாய வாய்க்கால் தடுப்புச்சுவர் அமைக்க கோரிய மனுவுக்கு தீர்வு
தூத்துக்குடி மக்கள் கோர்ட்டு மூலம், விவசாய பாய்மான வாய்க்கால் தடுப்புச்சுவர் அமைக்க கோரிய மனுவுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மக்கள் கோர்ட்டு மூலம், விவசாய பாய்மான வாய்க்கால் தடுப்புச்சுவர் அமைக்க கோரிய மனுவுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
தடுப்புச்சுவர்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்துக்கு உட்பட்ட சாயர்புரம் பேரூராட்சி வேதமாணிக்கபுரம் கிராமத்தில் வசிக்கும் டி.பால் செல்வம் என்பவர் தங்கள் பகுதிக்கு தமிழக அரசு நலத்திட்டம் மூலம் விவசாய பாய்மான வாய்கால் தடுப்புப்சுவர் மற்றும் பேவர்பிளாக் சாலை அமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆனால், அந்த வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து பால் செல்வம், தூத்துக்குடியில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் கோர்ட்டை அணுகினார். நிரந்தர மக்கள் நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.
ரூ.90 லட்சம்
இதனை தொடர்ந்து சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும் மற்றும் மாவட்ட நீதிபதியுமான எஸ்.உமாமகேசுவரி முன்பு ஆஜராகி வேதமாணிக்கபுரம் கிராமத்துக்கு அந்த திட்டத்தை நடைமுறைபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி ரூ.90 லட்சம் மதிப்பில் வேதமாணிக்கபுரம் கிராமத்தில் விவசாய பாய்மான வாய்க்கால் தடுப்புச்சுவர் மற்றும் பேவர்பிளாக் சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பான அறிக்கையை பேரூராட்சி அதிகாரிகள் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரியிடம் வழங்கினர். இதன் அடிப்படையில் டி.பால் செல்வம் மனுவானது நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்து வைக்கப்பட்டது. இதுபோன்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதி சார்ந்த பிரச்சினைகளுக்கு எந்த வித கட்டணமுமின்றி நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் மனு அளித்து தீர்வு காணலாம் என நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதியான உமாமகேசுவரி தெரிவித்து உள்ளார்.