விவசாய நிலம்- குடியிருப்புகளுக்கு சொந்த பட்டா வழங்கக்கோரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டம்


விவசாய நிலம்- குடியிருப்புகளுக்கு சொந்த பட்டா வழங்கக்கோரி  ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2022 1:00 AM IST (Updated: 20 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

திடீர் தர்ணா போராட்டம்

ஈரோடு

விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு சொந்த பட்டா வழங்கக்கோரி கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய நிலம்- குடியிருப்பு

ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவுக்கு உள்பட்ட மேவாணி கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் பலருக்கு விவசாய நிலமாக பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த இடம் வக்பு வாரியத்தின் சொத்தாக வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாவட்ட வருவாய்துறை மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதேபோல் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட மலையபுதூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளும் வக்பு வாரிய சொத்தாக உள்ளதாக தெரிகிறது.

இதன்காரணமாக விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகளின் பட்டா நிலங்களின் உரிமை பறிபோய் உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

தர்ணா

அதுமட்டுமின்றி மேற்படி நிலங்கள் குறித்த விற்பனை மற்றும் வங்கி அடமானம், வில்லங்க சான்றிதழ், வேளாண் துறை திட்டங்கள், உரிமை சான்று போன்ற எதையும் பெற முடியாமல் பல குடும்பத்தினர் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் இதுபற்றி மாவட்ட நிர்வாகம், பத்திரப்பதிவுத்துறை, வக்பு வாரியம் ஆகியவற்றுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேவாணி மற்றும் மலையபுதூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், 'விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு தங்கள் பெயரில் சொந்த பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், 'கோரிக்கை குறித்து மனுவாக எழுதி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கொடுங்கள். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்,' என்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை ஆர்.டி.ஓ. திவ்ய தர்ஷினியிடம் மனுவாக அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. திவ்ய தர்ஷினி 'இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என பொதுமக்களிடம் தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோபி ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story