விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்படுவதாகவும், உதவி ெசயற்பொறியாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேளாண் எந்திரங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் செய்து சாகுபடி செய்யவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்தவும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை எந்திரமயமாக்கல் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
மானியம்
தற்போது 2-வது தவணையாக 9 உழுவை எந்திரம், 80 பவர் டில்லர், ஒரு பிரஷ் கட்டர், ஒரு புல்வெட்டும் கருவி, 3 ரோட்டவேட்டர், ஒரு விசைகளை எடுக்கும் கருவி, ஒரு வைக்கோல் கட்டும் கருவி மற்றும் 4 பலவகை கதிரடிக்கும் எந்திரம் ஆக மொத்தம் 100 எந்திரங்கள் ரூ.1 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் தூத்துக்குடி உதவி செயற் பொறியாளர் (9655708447) அலுவலகத்தையும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர் (9443276371) அலுவலகத்தையும் மற்றும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள், திருச்செந்தூர் உதவிசெயற் பொறியாளர் (9443688032) அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நிலப்பட்டா, அடங்கல், சாதிச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய உரிய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பித்து பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.