ஏரியில் சாயப்பட்டறை நீர் கலப்பதால் விவசாயம் செய்ய முடிய வில்லை


ஏரியில் சாயப்பட்டறை நீர் கலப்பதால் விவசாயம் செய்ய முடிய வில்லை
x

ஏரியில் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. தாசில்தார் சுமதி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், தலைமையிடத்து தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அவர் பேசியதாவது:-

கழிவு நீர் கலப்பு

மாகாணிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் லுங்கி கம்பெனியின் சாயப்பட்டறை கழிவுகள் ஏரியில் கலப்பதால் ஏரியில் மீன்கள் இறந்து போகும் அபாயநிலை உள்ளது. ஏரி நீரானது விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லை. மாசு கட்டுப்பாடு வாரியம் முறையாக நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் எதிர்காலத்தில் அந்த ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை உருவாகிறது.

சிறுவளையம் செல்லியம்மன் கோவில் குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், பனப்பாக்கம், சிறுவளையம் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் குரங்குகளை பிடித்து வனபகுதிகளில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும், நெமிலி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் நெல்விதை, உளுந்து, ஆகியவை முறையாக தருவதில்லை. அனைவருக்கும் விதை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இக்கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் மனோகரன் (நெமிலி), குமார் (பனப்பாக்கம்), சரவணன் (காவேரிப்பாக்கம்), வேளாண்மை அலுவலர் ராமமூர்த்தி, தோட்டக்கலை அலுவலர் வெங்கடேசன், விவசாய சங்க பிரதிநிதிகள் சுபாஷ், பிரகாசம் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story