மானிய வாடகையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
மானிய வாடகையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
சிறு, குறு விவசாயிகள் மானிய வாடகையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
மானிய வாடகையில் வேளாண் கருவிகள்
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடைப்பணிகளுக்கு டிராக்டருடன் இயங்க கூடிய கருவிகளை ரிவர்சிபிள் மோல்ட் போர்ட்டு கலப்பை, நிலக்கடலை தோண்டும் கருவி, நிலக்கடலை பறிக்கும் கருவி, சோளம் அறுவடை எந்திரம், வைக்கோல் ரவுண்டு பேலர், ரோட்டரி மல்சர், புல்டோசர், லாரியில் இயக்கப்படும் தேங்காய் பறிக்கும் எந்திரம் போன்ற கருவிகள் 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்பட உள்ளன.
வறண்ட நிலத்தில் 50 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளின் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் மற்றும் உபகரணங்களுடன் 1 ஏக்கர் நிலத்தில் 1 மணி நேரத்துக்கு தலா ரூ.250 அல்லது அதிகபட்சமாக 5 மணி நேரத்துக்கு 5 ஏக்கர் அளவு இதில் எது குறைவோ அதன் அடிப்படையில் மானியமாக மொத்த வாடகை ரூ.1,250 வருடத்துக்கு ஒருமுறை விவசாயிகள் பெறலாம்.
சிறு,குறு விவசாய சான்றிதழ்
ஈர நிலத்தில் 50 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளின் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் மற்றும் உபகரணங்களுடன் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 மணி நேரத்துக்கு ரூ.250 அல்லது அதிகபட்சமாக 5 மணி நேரத்திற்கு 2.5 ஏக்கர் இதில் எது குறைவோ அதன் அடிப்படையில் மானியமாக மொத்த வாடகை ரூ.625 வருடத்துக்கு ஒருமுறை விவசாயிகள் பெற முடியும்.
வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை இ-வாடகை செயலி மூலமாக முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம். தாங்கள் செலுத்திய வாடகையை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
----