பாதிக்கப்பட்ட கரும்புகளை வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டனர்
அய்யம்பேட்டை அருகே மஞ்சள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்புகளை வேளாண்மை அதிகாரிகள் பாவயிட்டனர்.
அய்யம்பேட்டை,
அய்யம்பேட்டை அருகே மஞ்சள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்புகளை வேளாண்மை அதிகாரிகள் பார்ைவயிட்டனர்.
கரும்பு சாகுபடி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் வீரமாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வரபுரம், மணலூர், கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காகவும், வெல்லம் காய்ச்சுவதற்காகவும் இந்த கிராமங்களில் இருந்து ஆண்டாண்டு காலமாக கரும்பு நடவு செய்து வருகின்றனர்.ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்ய ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடவு மற்றும் மருதாம்பு செய்யப்பட்ட கரும்பு பயிர்களில் ஒரு சில வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டது. இந்த நோய் வேகமாக பரவி அடுத்தடுத்த கரும்பு வயல்களிலும் பரவியது.
விவசாயிகள் கவலை
தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான வயல்களிலும் புதிய வகை மஞ்சள் நோய் பரவி உள்ளது. இந்த நோய் தாக்குதலால் கரும்புகள் வளர்ச்சி இல்லாமல் அப்படியே நின்று விட்டது. இயற்கை, செயற்கை பூச்சிக்கொல்லிகளை தெளித்தும் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. இதனால் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீட்டு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து வேளாண்மை துறை அதிகாரிகள் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ஷீபாரோசி, வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர், உதவி இயக்குனர் சுஜாதா ஆகியோர் சோமேஸ்வரபுரம், மணலூர், வீரமாங்குடி ஆகிய கிராமங்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பூச்சிக் கொல்லி மருந்துகள்
பின்னர் அவர்கள் கூறியதாவது
வயல்களில் மண் பரிசோதனை செய்து, அதற்கேற்றவாறு சுழற்சி முறையில் பயிர் செய்ய வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள மஞ்சள் நோய் தாக்குதலுக்கு சில பூச்சிக் கொல்லி மருந்துகளை பரிந்துரைத்து உள்ளோம். மேலும் இந்த நோய் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது வேளாண்மை உதவி அலுவலர்கள் சரவணன், சதீஷ் மற்றும் பலர் இருந்தனர்.