வேளாண்மை இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பணி
திருத்துறைப்பூண்டியில் வேளாண்மை இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி;
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கடந்த ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் படி திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து குழுவினருக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் படி திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் கொறுக்கை மற்றும் வேளூர் ஆகிய இரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. இக் கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து அவர்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கி பயிற்சிகள் அளித்து குழுவினரின் தரத்தினை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் 2 குழுவினருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவியால் அவர்கள் தங்களது குழுவினர் தேர்வு செய்தபடி தரமான இயற்கை வேளாண் இடுபொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளனர். இவர்களின் பணிகளை திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் ஆய்வு செய்தார். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் இயற்கை வேளாண்மை இடுபொருட்களை திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் விற்பனை செய்ய குழுவினருக்கு தலா ஒரு கடை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வின் போது கொறுக்கை ஊராட்சி தலைவர் ஜானகிராமன், திருத்துறைப்பூண்டி துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் இருந்தனர்.