ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ.1 கோடியில் விவசாய திட்டப்பணிகள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ.1 கோடியில் விவசாய திட்டப்பணிகள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
x

வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ.1 கோடியில் விவசாய திட்டப்பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மக்களிடம் வேளாண் துறை பட்ஜெட்டுக்கான கருத்து கேட்பு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். விவசாயிகளுக்கு அதிக அளவில் மானியம் வழங்க வேண்டும், வேளாண் விதைகளில் கலப்படங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றை அவர் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ரூ.6 கோடியே 4 லட்சம் மதிப்பில் வாழைக்காய் ஏல மையம் அமைக்க கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,500 ஊராட்சிகளில் 5,209 ஊராட்சிகளில் அனைத்து வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் விவசாய பணிகள் நடந்து வருகிறது. மீதம் உள்ள ஊராட்சிகளிலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் 15 ஏக்கர் நிலத்தில் ஒரு அமைப்பு ஏற்படுத்தி, அதற்கு இலவச மோட்டார் மின் இணைப்பு வழங்கி, விவசாயம் செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி ரூ.5 உயர்த்தி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாயத்திற்கு தேவையான பணிகளை மேம்படுத்துவதற்கு அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 2,500 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற 240 அறிவிப்புகள் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வேளாண்துறை பட்ஜெட்டில் 4 புதிய வேளாண்மை கல்லூரிகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அரசின் நிதி நிலைமைக்கேற்ப புதிய வேளாண்மை கல்லூரிகள் அமைக்கப்படும். வேளாண் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை அமைச்சருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. உழவன் செயலி மூலம் உரம் பற்றி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் இயக்குனர் பிருந்தாதேவி, நீர்வடிப்பகுதி செயல் இயக்குனர் அன்பழகன், வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன், இணை இயக்குனர்கள் ஜெயசெல்வின் இன்பராஜ், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேளாண்துறை தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார்.


Next Story