கல்லணை கால்வாய் பாசனம் மூலம் விவசாயம் தொடங்கியது
மேற்பனைக்காடு, நெய்வத்தளி பகுதிகளில் கல்லணை பாசனம் மூலம் நேரடி விதைப்பு மற்றும் நடவுக்காண முன் ஏற்பாடுகளில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
கீரமங்கலம்:
கல்லணை பாசனம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல், கறம்பக்காடு, செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, நெய்வத்தளி, ஆயிங்குடி, வல்லவாரி உள்பட பல கிராமங்களில் கல்லணைத் தண்ணீரை பயன்படுத்தி நெல் உள்ளிட்ட விவசாயம் நடக்கிறது. ஆற்று தண்ணீரை நேரடியாகவும் ஏரி, குளங்களில் நிரப்பி வைத்து பாசனம் செய்து விவசாயம் நடக்கிறது.
இந்த வருடம் முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதாலும், கல்லணை கால்வாயில் தடையின்றி தண்ணீர் வருவதாலும் ஏரி, குளங்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.
விவசாய பணிகள்
மேற்பனைக்காடு உள்பட கடைமடை பகுதிகளில் கடந்த காலங்களில் 2 முறை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டது. ஆனால் கடந்த பல வருடங்களாக தண்ணீர் பற்றாக்குறை அல்லது அறுவடை நேரத்தில் அதிக மழை வெள்ள பாதிப்புகளால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் ஒரு போகம் நெல் விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர்.
அதேபோல இந்த வருடம் கல்லணை கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வருவதால் மேற்பனைக்காடு உள்பட சுற்றியுள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளில் தற்போது நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவுகளுக்கான விவசாயப்பணிகள் தொடங்கியுள்ளது. மேற்பனைக்காடு பகுதியில் சரியான வடிகால் இல்லாததால் நேரடி விதைப்புகளும் தாமதமாவதாகவும் அறுவடை நேரத்தில் அதிக மழை பெய்தால் வடிகால் வசதி இல்லாமல் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.