காய்கறி விதைகள் மானியத்தில் வினியோகம்
குடிமங்கலம் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் காய்கறிவிதைகள் மானியத்தில் வினியோகம் செய்யப்படும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தோட்டக்கலைத்துறை
குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சாகுபடி சந்தேகங்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 8 விதமான காய்கறி விதை பொட்டலங்கள் கொண்ட தொகுப்புகள் வீட்டு உபயோகத்திற்காக கிராமங்களில் மானியத்துடன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத் துறையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் கடந்த வருடத்தில் தக்காளி, கத்தரி, மிளகாய், முருங்கை, பாகற்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளுக்கு மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து நாற்றுகள் 64.5 எக்டேர் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பல வகை செடிகள் மா, எலுமிச்சை, வாழை போன்றவற்றின் சாகுபடிக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீர் சேகரிப்பு கட்டமைப்பு 3 விவசாயிகளுக்கும், தேனீ வளர்ப்பு 4 விவசாயிகளுக்கு மினி டிராக்டர் 2 விவசாயிகளுக்கும், சிப்பம் கட்டும் அறை 2 விவசாயிகளுக்கும், குறைந்த விலை வெங்காய சேகரிப்பு கட்டமைப்பு 10 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டாரத்தில் ரூ. 34 லட்சத்து 66 ஆயிரம் அளவில் மானியத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சின்னவெங்காயம் நாற்றுகள் வழங்குதல், கீரை விதைகள் வழங்குதல், பந்தல் அமைப்புசெய்தல், இயற்கை விவசாயம் செய்தல் போன்ற திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.21 லட்சத்து 22 ஆயிரம் மானியத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டாரத்தில் 446 விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள் அமைத்துத்தரப்பட்டுள்ளன.
செயல்படுத்தப்படும் திட்டங்கள்
நீர் மேலாண்மை திட்ட செயல்பாடுகளின் கீழ் ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் செலவில் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட திட்டங்களின் மூலம் கடந்த ஆண்டு குடிமங்கலம் வட்டாரத்தில் 1573 விவசாயிகள் பயன் பெற்றனர். பருவமழை மற்றும் பி.ஏ.பி. பாசனம் கிடைத்துவரும் வட்டாரத்தில் வினியோகிக்க வேண்டிய காய்கறி விதை நாற்றுகள் நமது அரசு தோட்டக்கலை பண்ணையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி குறிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் பருவத்தில் காய்கறிகள் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோட்டக்கலைத் துறை மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா, தோட்டக்கலைத்துறை அலுவலர் பிரியங்கா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சித்தேஸ்வரன், சங்கவி ஆகியோரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்