வாடகைக்கு விவசாய எந்திரங்கள்
உடுமலை வேளாண் பொறியியல் துறையில் விவசாய எந்திரங்கள் வாடகைக்கு உள்ளதால் விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் துறை
கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயத் தொழிலில் எந்திரமயமாக்கல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்தநிலையில் டிராக்டர், சுழல் கலப்பை உள்ளிட்ட பொருட்கள் வேளாண் பொறியியல்துறையின் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவற்றை வாங்க முடியாத விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் எந்திரங்களை வாடகைக்கும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களை உள்ளடக்கிய உடுமலை வேளாண் பொறியியல் துறையின் மூலம் டிராக்டர் ஒரு மணி நேரத்துக்கு ரூ.500 வாடகைக்கு வழங்கப்படுகிறது.மேலும்பொக்லைன் எந்திரம் மணிக்கு ரூ.890 வாடகைக்கும், டோசர் எந்திரம் மணிக்கு ரூ.1,320 வாடகைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
முன் பதிவு
டிராக்டருடன் சுழல் கலப்பை, கொத்துக் கலப்பை, வேளாண் கழிவுகளை தூளாக்கும் சுழல் தழைக்கூளம் போன்றவற்றையும் விவசாயிகள் தேவைக்கேற்ப இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர தேங்காய் பறிக்க உதவும் எந்திரம் மணிக்கு ரூ.450 வாடகைக்கு வழங்கப்படுகிறது. தற்போது உடுமலையில் 3 டிராக்டர்கள், 1 பொக்்லைன் எந்திரம், 1 டோசர் மற்றும் 2 தேங்காய் பறிக்கும் எந்திரங்கள் உள்ளது.
இதனை வேளாண் பொறியியல் துறையில் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.டீசல் விலை உயர்வால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அனைத்து எந்திரங்களும் வாடகை சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.ஆனாலும் தனியார் நிறுவனங்களை விட குறைந்த அளவே வாடகை உள்ளதால் இவற்றை பெறுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டும் நிலை உள்ளது.