மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு


பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாளை (திங்கட்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

தர்மபுரி

மாட்டுப்பொங்கல்

இந்த நாளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை நன்றாக குளிப்பாட்டி, அவைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு மற்றும் அலங்கார பொருட்கள் அணிவித்து அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பின்னர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கால்நடைகளை ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

இதைத்தொடர்ந்து கால்நடைகளுக்கு பொங்கல், பழங்கள் வழங்குவது வழக்கம். மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

விற்பனை விறுவிறுப்பு

இந்த விழாவையொட்டி தர்மபுரி கடைவீதியில் கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் மூக்கணாங்கயிறு, சலங்கை மணி, பெல்ட், அலங்கார கயிறுகள், பலூன்கள், கால்நடைகளை கட்டி இழுப்பதற்கான புதிய கயிறுகள், கொம்புகளுக்கு தீட்டப்படும் வண்ணங்கள், கலர் பவுடர்கள், பலூன்கள் ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஏராளமான விவசாயிகள் மற்றும் வீடுகளில் கால்நடைகளை வளர்க்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான விதவிதமான அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் அலங்கார பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.


Next Story