உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு; முதல்-அமைச்சர் 23-ந் தேதி ஜப்பான், சிங்கப்பூர் பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க தொழில் நிறுவன தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
சென்னை,
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா பெருவயல் கிராமத்தில் 52 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 891 கோடி ரூபாய் முதலீட்டில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் குளிர்சாதன எந்திரங்கள் (ஏ.சி.) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (கம்ப்ரசர்) உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி ஆகியவை தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக்கத்துறை சார்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.
மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேசன் குழும தலைவர் யாசுமிச்சி தாசுனோகி வரவேற்றார்.
அடிக்கல் நாட்டினார்
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மிட்சுபிஷி நிறுவனம், தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்பின்பு, விழா மேடையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் இந்த ஆலைக்கு மு.க.ஸ்டாலின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஒவ்வொரு முறையும் தொழில்துறை அமைச்சர், துறையின் செயலாளரை சந்திக்கும்போதெல்லாம், 'இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்?' என கேட்டுக்கொண்டே இருப்பேன்.
ஜப்பான், சிங்கப்பூர் பயணம்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வருகிற 23-ந் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 'தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை' வெளியிடப்பட்டது. இதன்பின்பு 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள், ஏற்கனவே உள்ள தங்கள் மையங்களை விரிவுபடுத்தியுள்ளன. இதன்மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மூலமாக பல துணை நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பு ஏற்படும்.
இந்த புதிய ஆலையில் 60 சதவீதத்துக்கு மேல் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மிட்சுபிஷி நிறுவனம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அல்லும் பகலும் உழைக்கிறோம்
அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசிய அளவில், முதலீடுகளை ஈர்த்திட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்காக நாங்கள் அல்லும் பகலும் உழைத்து வருகிறோம்.
ஜப்பான்-இந்தியா முதலீடு மேம்பாட்டு கூட்டாண்மை திட்டத்தின் கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 ஜப்பானிய தொழில்நுட்ப நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. மேலும், தமிழ்நாட்டில், அதிகளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த உறவை மேலும் வலுப்படுத்திடும் வகையில், இந்த மாத இறுதியில், முதலீட்டு குழுவுக்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்ல இருக்கிறேன். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறேன்.
உறுதியாக நம்புகிறேன்
2030-ம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்ற உயரிய இலக்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த பாதையின் ஒரு மைல்கல்லாக, மிட்சுபிஷி நிறுவனத்தின் ஆலை நிறுவப்பட இருப்பது, தமிழ்நாடு அடைந்திருக்கும் பல வெற்றிகளுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் மின்னணு உற்பத்தி சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்திடும் என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, சென்னையில் உள்ள ஜப்பான் துணைத்தூதர் டாகா மசாயுகி, மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா நிர்வாக இயக்குநர் கசுஹிகோ தமுரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.