அதிமுக பொதுக்குழு வழக்கு - ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை

இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் மீறப்பட்டு இருந்தால், முறையாக பின்பற்றப்படவில்லை என்றால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் எனக் கூறிவிட்டு, அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு தரப்பிடம் நீதிபதி கூறினார்.
பொதுச்செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட போதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் செல்லாது என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலும் செல்லாததாகி விடுமா என விளக்க வேண்டும் என நீதிபதி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்குதான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டாலும் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
2016ல் உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சசிகலா சிறைக்கு சென்ற பின் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சி விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
அதிமுகவில் இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக்குழுவை யார் கூட்டலாம்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கட்சி விதிகளின் படி தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் அந்த பதவிகளுக்கான பணிகளை மேற்கொள்வர் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. தேர்தல் விதி திருத்தத்துக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு தொடரும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.