அதிமுக பொதுக்குழு வழக்கு : ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீட்டு மனு வரும் 30 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த 2-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், 'அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.இருவரும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது.