ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அதிமுகதான் உதாரணம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அதிமுகதான் உதாரணம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அதிமுகதான் உதாரணம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சமீபத்தில் மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாதோ அதற்கு உதாரணமாக அந்த மாநாடு நடந்தது. கேலிக்கூத்து மாநாடாக அந்த மாநாட்டை நடத்தினார்கள். மாநாட்டில் ஏதாவது கருத்துக்கள் சொல்லப்பட்டதா? அந்த கட்சியின் வரலாறு சொல்லப்பட்டதா?.. அந்த இயக்கத்தின் கொள்கைகள் சொல்லப்பட்டதா?.. என்றால் இல்லை. வெறும் கலை நிகழ்ச்சிகள் தான் நடைபெற்றது.
புளி சாதம் நல்லா இருந்ததா இல்லை தயிர்சாதமா? இது தான் அவர்களுடைய ஒரே விவாதம். 2 நாட்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மாநாட்டுக்கு அழைத்து சென்ற என் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசாரும் விசாரித்து வருகின்றனர். முதலில் யாரை விசாரிக்க வேண்டும் என்றால் ஜெயக்குமாரை தான் விசாரிக்க வேண்டும். ஏன் என்றால்.. மாநாட்டின் பொறுப்பாளர் அவர் தான்.
இப்படி ஒரு கேலிக்கூத்தான மாநாட்டுக்கு கோடிக்கணக்கில் செலவு. அவர்கள் மாநாடு நடத்திய அதே தேதியில் நாம் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருந்தோம். நீட் விவகாரத்தில் என்னைத்தான் எல்லாரும் விமர்சிக்கிறார்கள்.. ஆமாம்.. நான் வாக்குறுதி கொடுத்தது உண்மை.. அதற்காக உண்மையாக நானும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.