பண்ருட்டி அருகே அதிமுக பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலைஉடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்


பண்ருட்டி அருகே அதிமுக பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலைஉடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே இடப்பிரச்சினை காரணமாக அ.தி.மு.க பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடலூர்

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் அண்ணாதுரை(வயது 45). அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர், எஸ்.ஏரிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பக்கத்து இடத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் அண்ணாதுரையின் இடத்தை காலி செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாதுரை வசித்து வந்த இடத்தை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது.

இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அண்ணாதுரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாலை மறியல்

இதைபார்த்து அண்ணாதுரையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அண்ணாதுரையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உடலை ஒரு கட்டிலில் எடுத்துக்கொண்டு எஸ்.ஏரிப்பாளையத்தில் பண்ருட்டி-மடப்பட்டு சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் குவிப்பு

இதையடுத்து அண்ணாதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story