தஞ்சையில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்


தஞ்சையில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்
x

தஞ்சையில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சாவூர்

தஞ்சையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று நடத்தியது. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 30 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்று உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

கல்வி உதவித்தொகை

மேலும் 77 கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி ஆகிய 2 ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், திருவையாறு இணை கூட்டு சிகிச்சை மையத்திலும் மருந்துகள் வழங்கப்படுகிறது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 2021-2022-ம் ஆண்டில் 131 குழந்தைகளுக்கு ரூ.41,300 வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

இந்த ஊர்வலத்தில் தஞ்சையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 1000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாநகர் நல அலுவர் சுபாஷ்காந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story