ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்


ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்
x

ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்மன் வீதிஉலா நடக்கிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து காந்திமதி அம்மன் தவக்கோலத்துடன் தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.

ரிஷப வாகனத்தில்...

நேற்று காலை 6 மணிக்கு கம்பாநதியில் காந்திமதி அம்மன் தவம் இருந்தார். 10.35 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு காட்சி கொடுக்க, சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். நெல்லை கோவிந்தர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார்.

பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் திருஞானசம்பந்தருக்கு, நெல்லையப்பரும், நெல்லை கோவிந்தரும் காட்சி கொடுத்தனர். அப்போது சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையப்பர், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் ஆகிய 3 பேரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்

மதியம் 12.15 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. அப்போது காந்திமதி அம்மன், சுவாமியை 3 முறை சுற்றி வந்தார். இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், காந்திமதி அம்மனுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர். அப்போது வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டது.

இதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானபால் ஊட்டும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண வைபவம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது. இன்று முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை அம்பாள் ஊஞ்சல் விழா நடக்கிறது. 26-ந்தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டிணப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.


Next Story