சுக்கானாற்றில் பாசனத்திற்கு தடையாக உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
திருவாரூர் சுக்கானாற்றில் பாசனத்திற்கு தடையாக உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுக்கானாறு
திருவாரூர் நகரின் வடக்கு பகுதி வழியாக சுக்கானாறு செல்கிறது. இந்த ஆறு ஒடம்போக்கி ஆற்றில் இருந்து பிரிந்து திருவாரூர் வழியாக கேக்கரை, கீழபேட்டை, மேலப்பேட்டை, மொச்சக்குடி, பேட்டை தஞ்சாவூர், அடிப்புதுச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று ஓடாச்சேரி என்ற இடத்தில் வெட்டாற்றில் கலக்கிறது. மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சுக்கானாறு நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மழை காலங்களில் இந்த ஆறு இப்பகுதியின் வடிகாலாகவும் இருந்து வருகிறது.
தற்போது இந்த சுக்கனாற்றில் திருவாரூர் பகுதியில் உள்ள கழிவுநீர் கலந்து சாக்கடை ஓடையாக மாறி வருகிறது. மேலும் குப்பைகளும் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. கழிவுநீர் கலப்பால் மாசு அடைந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நிலை நிலவுகிறது. எனவே சுக்கனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆகாயத்தாமரை
தற்போது திருவாரூர் பகுதியில் சுக்கானாற்றில் ஆகாயத்தாமரை அதிக அளவில் மண்டி கிடக்கிறது. இந்த ஆகாயத்தாமரைகள் ஆற்றையே மறைக்கின்ற அளவில் படர்ந்து கிடப்பதால் தண்ணீர் பாசனம் தடைப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து கேக்கரை பகுதி விவசாயிகள் கூறுகையில், சுக்கனாற்றில் கழிவு நீர் கலந்து சாக்கடை கால்வாயாக மாறியுள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இதனால் இந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது.
கோரிக்கை
வயலில் இறங்கி வேலை பார்க்கும் விவசாய தொழிலாளர்களுக்கு அரிப்பு போன்ற தோல் வியாதி வருகிறது. எனவே கழிவுநீரை சுக்கானாற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.