பாலக்கோட்டில் 20 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் 'ஏர்ஹாரன்கள்' பறிமுதல்-ரூ.2½ லட்சம் அபராதம்


பாலக்கோட்டில் 20 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல்-ரூ.2½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோட்டில் 20 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் 'ஏர்ஹாரன்கள்' பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் தடை விதிக்கப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறையினருக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இந்தநிலையில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் ஊழியர்கள் பாலக்கோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

'ஏர்ஹாரன்கள்' பறிமுதல்

அப்போது 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 பஸ்களில் தடை விதிக்கப்பட்ட அதிக ஒலி எழுப்பும் 'ஏர்ஹாரன்கள்' பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவை அகற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், ஒரு தனியார் பஸ்சில் அனுமதியின்றி தீப்பெட்டி தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்றதும், முறையாக வரி மற்றும் உரிமம் பெறாததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எச்சரிக்கை

இதேபோல் அடிக்கடி வாகன சோதனை நடத்தப்படும் என்றும், மீண்டும் ஏர்ஹாரன்களை பொருத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story