காற்றில் பறக்கும் குப்பைகள்; இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
கல்லல் அருகே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவை காற்றில் பறப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.
காரைக்குடி,
கல்லல் அருகே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவை காற்றில் பறப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.
சாலையோரம் குவிந்த குப்பைகள்
கல்லல் அருகே உள்ளது செம்பனூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து குப்பைகளை அங்குள்ள ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லல்-மதகுபட்டி சாலையோரத்தில் ஆங்காங்கே குவியலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகள் அகற்றப்படாததால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
தற்போது காற்று வீசும் போது குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறக்கின்றன. அதோடு தெருநாய்களும் குப்பைகளை கிளறி சாலையில் போட்டு விடுகின்றன. காற்றில் பறக்கும் குப்பைகள் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தர்மச்சங்கடத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது-
இந்த பகுதியில் உள்ள குப்பைகள் எல்லாம் இந்த சாலையோரத்தில் கொட்டப்படுவதால் அதன் அருகே உள்ள குளம் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது.
சாலையோரத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என்ற நோக்கத்தில் தான் குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அது சேதமடைந்ததால் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் புதிய குப்பை தொட்டி வைக்க வேண்டும். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.