விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டம் நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டின் முதன்மைக் கட்டமைப்புத் திட்டமான விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு எந்தக் காரணமும் தடையாக இருக்கக்கூடாது.
ரூ.4 ஆயிரத்து 80 கோடி தேவைப்படும் 15.30 கி.மீ. நீளம் கொண்ட கிளாம்பாக்கம்-விமானநிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு தான் முழுமையாக நிதி வழங்க வேண்டும். ஏற்கனவே ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பிலான 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததால், அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 ஆயிரம் கோடியை தமிழக அரசே ஒதுக்கி வருவதாகவும், இத்தகைய சூழலில் கிளாம்பாக்கம்-விமான நிலையம் திட்டத்திற்கும் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.
உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை
சென்னை விமானநிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டம் மிக முக்கியமான திட்டம் ஆகும். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி தடையாக இருக்கக் கூடாது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி கோரி 2 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு அதன் பங்கு நிதியை வழங்க வேண்டும். தமிழக அரசும் பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் நிதியுதவி பெற்றாவது விமானநிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.