சேலத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்-பெண்கள் உள்பட 130 பேர் கைது
சேலத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம்
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், 240 நாட்கள் பணிபுரிந்தாலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி பலன்களை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சேலம் மாவட்டக்குழு சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கட்டிட சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிதா, சாலையோர சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
130 பேர் கைது
அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேனில் ஏற்றப்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.