ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x

ஆரணியில் மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊர்வலம்

ஆரணி, போளூர் தாலுகாவைச் சேர்ந்த ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்களின் சார்பாக மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து ஆரணி அண்ணா சிலை அருகில் இருந்து மாவட்ட துணை தலைவர் வி. குப்புரங்கன் தலைமையில் ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

இதில் நிர்வாகிகள் வாசுதேவன், அருணகிரி, சிரோன்மணி, செந்தாமரை, ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் மோகன்குமார், மாவட்ட துணை பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஆரணி வட்ட கவுரவ தலைவர் எம்.கோவிந்தசாமி, ஆரணி வட்ட செயலாளர் பி.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் ஆரணி பழைய பஸ்நிலையம் மணிகூண்டு அருகே வந்தனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசை குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை, கூட்டுறவு துறை, தனியார் நிறுவனங்களில் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரப்படுத்த வேண்டும்,

எந்தத் தொழில் பணிபுரிந்தாலும் மாதம் ரூ.21,000 ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டுமான தொழிலுக்கு விபத்து மரண உதவித்தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தி தர வேண்டும்.

ஆட்டோ, கைத்தறி, கட்டுமானம், பொது சுமை, கற்பகம் கிடங்கு சுமை, பஞ்சாலை தொழிலாளர்களுக்கான இயற்கை மரண உதவித்தொகை ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி தர வேண்டும்.

ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும், எப்.சி. இன்சூரன்ஸ், சாலை வரி குறைக்க வேண்டும். போக்குவரத்து, டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

நிரந்தரப்படுத்த வேண்டும்

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், 2020-ம் ஆண்டு மின்சார திருத்த மசோதா சட்டத்தை அமலாக்க கூடாது.

தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும. சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல் உள்ளாட்சி நிர்வாகமே செயல்படுத்த வேண்டும்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க ஜி.எஸ்.டி. வரியிலிருந்து 2 சதவீத நிதியை ஒதுக்கி நிதி பயன்கள் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.

கைது

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story