திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோரத வீதி உலா
திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோரத வீதி உலா நடைபெற்றது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் அம்மன் மரக்கேடயம், கிளிவாகனம், காமதேனு வாகனம், சந்திரபிறை வாகனம், ரிஷபவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் 9-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் உற்சவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோரதத்தில் 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தார். 10-ம் நாளான இன்று (சனிக்கிழமை) பல்லக்கில் வீதி உலா வருகிறார். தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12-ம் நாளான வருகிற 24-ந் தேதி இரவு 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடித்தெப்பகுளத்தில் நடைபெறுகிறது. உற்சவத்தின் போது சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.