அலகுமலையில் அடுத்த மாதம் 19-ந் தேதி ஜல்லிக்கட்டு
அலகுமலையில் அடுத்த மாதம் 19-ந் தேதி ஜல்லிக்கட்டு
பொங்கலூர்
பொங்கலூர் அருகே அலகுமலையில் 29-ந் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு தள்ளி வைக்கப்பட்டது. அதன்ப அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதில் 3 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு
பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 29-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைப்பதற்கு கால்கோள் விழா நடைபெற்றது. இந்த நிலையில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றம் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அதில் மனுதாரரின் கோரிக்கைக்கு
கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த இடத்தில் மாவட்ட சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி முடிவெடுக்க வேண்டியுள்ளதால் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
கூட்டம்
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பிலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி ஆகியோரை அழைத்து மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஜல்லிக்கட்டு நடைபெற பூஜை போடப்பட்ட இடத்தை விடுத்து, மாற்று இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்கியது. அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டியை ஏற்கனவே 2 முறை நடைபெற்ற இடத்தில் போட்டியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம், மாடு வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் எனது தோட்டத்தில் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உட்பட பல்வேறு நிர்வாகிகளை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாக ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி தெரிவித்தார்.
---
3 காலம்
அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.