ஆலந்தலை கடற்கரையை தூய்மைப்படுத்திய மாணவர்கள்
ஆலந்தலை கடற்கரையை வியாழக்கிழமை மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்.
திருச்செந்தூர்:
கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்திடவும், கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்திடவும் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை கடற்கரை சுத்தம் செய்யும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் முக்கிய கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்திடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய புவி அறிவியல் அமைச்சகமும், தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக்கழகமும், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும், விஞ்ஞான் பிரச்சார், மத்திய அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அறிவுசார் தொழில்நுட்ப மையம் இணைந்து தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடல் என்பதை வலியுறுத்தி தமிழக கடற்கரைகளை தூய்மைப்படுத்தி வருகிறது.
இதையொட்டி திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது. 2-ம் நாளான நேற்று திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, காஞ்சி ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் விஸ்டம் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியை, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் சாந்தகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவுசார் தொழில் நுட்ப மையத்தின் வழிநடத்தும் பேராசிரியர் சுடலை, காஞ்சி ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதன்மை முதல்வர் செல்வவைஷ்ணவி, விஸ்டம் பள்ளி முதல்வர் சுலேகா, ஆலந்தலை பங்குதந்தைகள் ஜெயக்குமார், பாலன், ஊர் நலக்கமிட்டி தலைவர் ரமேஷ், ஆலோசகர் ஜான்சன், காஞ்சி பள்ளி முதல்வர் ஜீனத் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றியதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். முடிவில் காஞ்சி பள்ளி நிர்வாக அலுவலர் கிஷோர்பாபு நன்றி கூறினார்.