விஷச்சாராய கொலை வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைப்பு
மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதியன்று மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷச் சாராயம் குடித்த 8 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம்குமார், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி ஆகிய 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆவணங்கள் ஒப்படைப்பு
இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டதன்பேரில் கைதான 15 பேர் மீதும் மரக்காணம் மற்றும் சித்தாமூர் போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் விழுப்புரம் வருகை தந்து இவ்வழக்கின் தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையிலான போலீசார் விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அந்த ஆவணங்களை விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை
இதையடுத்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார், தங்கள் விசாரணையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து மரக்காணம் எக்கியார்குப்பம் கிராமத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று சம்பவம் நடந்தது எப்படி? என்று மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
அடுத்தகட்டமாக கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதுபோல் இவ்வழக்கு தொடர்பாக துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசாரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விசாரணையின் முடிவில், இச்சம்பவத்தில் வேறு யார், யாருக்கெல்லாம் தொடர்பு இருந்துள்ளது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற முழு விவரம் தெரியவரும்.