காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை?


காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை?
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காந்திஜெயந்தியையொட்டி காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

சிவகங்கை

காரைக்குடி,

காந்திஜெயந்தியையொட்டி காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மதுக்கடைகள் மூடல்

காந்திஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மதுக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள், அதை சார்ந்த உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை மூடப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்திலும் மதுக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என கலெக்டர் அறிவித்திருந்தார்.

காரைக்குடி பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் காந்திஜெயந்தியையொட்டி நேற்று காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பார்களில் தடையை மீறி மது விற்பனை நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மது விற்பனை ஜோர்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காரைக்குடியில் சில மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஆனால் அதை ஒட்டிய பார்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. அதில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்றது.

அங்கு விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தனர். இதனால் மது பிரியர்கள் கூட்டம் கூடாமல் ஒவ்வொருவராக சென்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மது விற்பனை ஜோராக நடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story