அலகுமலை கோவிலில் சூரனை வதம் செய்த முருகன்


அலகுமலை கோவிலில் சூரனை வதம் செய்த முருகன்
x
திருப்பூர்

-

பொங்கலூர் அருகே அலகுமலையில் கந்த சஷ்டியையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சியில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

கந்த சஷ்டி திருவிழா

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சாமி கோவில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. பின்னர் கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் முன்னிலையில் கோபூஜை நடைபெற்றது.

வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் கங்கணம் அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தனர். இதில் திருப்பூர் விநாயகா டெக்ஸ் வலுப்பூரசாமி உள்பட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், குழந்தைகள் உள்பட பலர் சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

சூரசம்ஹாரம்

பின்னர் அலகுமலை மூலவரான முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சாமிக்கு முதல் நாள் மரிக்கொழுந்து பச்சை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் நாள் வெண்மை அலங்காரமான மல்லிகை மற்றும் சம்பங்கி பூ அலங்காரத்திலும், 3-ம் நாள் செவ்வந்திப்பூ மாலையுடன் மஞ்சள் நிற அலங்காரத்திலும், 4-ம் நாள் ரோஜாபூ அலங்காரத்துடன் இளஞ்சிவப்பு நிற அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

5-ம் செவ்வரளி பூ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 6-ம் நாள் சூரசம்ஹாரம் நேற்று மாலை 3:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு உருவங்கள் தாங்கி வந்த சூரனை முருகன் வதம் செய்தார்.

திருக்கல்யாணம்

முன்னதாக கைலாசநாதர் கோவிலில் தாயாரிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆறுபடை முருகன் கோவில் அருகே திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு மற்றும் கோவில் ஆன்மிகப்பேரவையினர் செய்துள்ளனர்.


Next Story