புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் கைது
ராமேசுவரத்தில் புதுமாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேசுவரத்தில் புதுமாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுமாப்பிள்ளை கொலை
ராமேசுவரம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் முகேஷ் (வயது 25). மீனவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பங்குனி உத்தர திருவிழா சமயத்தில் சில மர்ம நபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்தார். மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் அவர் திருமணமான புதுமாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் ஏராளமானோர் திடீர் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து 11 பேரை தேடிவந்தனர்.
11 பேர் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் என்பவரை உடனடியாக கைது செய்தனர். மாந்தோப்பு செந்தூரான் மகன் பாலமுருகன் (29), பெரிய பள்ளிவாசல்தெரு முத்து மகன் ராம்கி (28), காளிமுத்து மகன் கணேஷ் (26), மாந்தோப்பு செல்வராஜ் மகன் ராம்குமார் (23), சைவத்துரை மகன் புஷ்பராஜ் (19), அண்ணாநகர் ராஜா மகன் ராஜகுரு (28) ஆகிய 6 பேரை கடந்த 11-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டில் பள்ளிவாசல்தெருவை சேர்ந்த குமரவேல் மகன் பாரதிராஜா, ரமேஷ் ஆகிய 2 பேர் சரணடைந்தனர். இவர்களை தொடர்ந்து நேற்று போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெரியபள்ளிவாசல்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்ற இந்திரஜித், பாண்டி மகன் வினோத்குமார் (33), காளிமுத்து மகன் கணேஷ் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வாலிபர் முகேஷ் கொலை வழக்கில் மொத்தம் 11 பேர் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சிலரை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து விசாரித்து உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.