பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் சி பி சி ஐ டி அலுவலகத்தில் ஆஜர்


பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் சி பி சி ஐ டி அலுவலகத்தில் ஆஜர்
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்களிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது

விழுப்புரம்

விழுப்புரம்

மாணவி ஸ்ரீமதி சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த 5 பேரின் நிபந்தனை ஜாமீன் காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

இதற்கிடையே மேலும் 4 வார காலம் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினமும் இருவேளை ஆஜராகி கையெழுத்திடும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் நேற்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி முன்னிலையில் 5 பேரும் அலுவலக கோப்பில் கையெழுத்திட்டனர்.

2 மணி நேரமாக விசாரணை

அதன் பிறகு பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர், ஆசிரியைகளிடம் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவா்கள் பள்ளி நிர்வாகம் தரப்பில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சுமார் 2 மணி நேரமாக நடந்த விசாரணை முடிந்ததும் அவர்கள் 5 பேரும் பகல் 12.45 மணியளவில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் மாலை 5.30 மணியளவில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்கள் இன்னும் 27 நாட்களுக்கு தினமும் 2 முறை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டியுள்ளது.


Next Story