நாகாலம்மன் நகரில் அனைத்து பஸ்களும் நின்றுசெல்ல வேண்டும்
அரக்கோணம் அருகே உள்ள நாகாலம்மன் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் அருகே உள்ள நாகாலம்மன் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ்கள் நிற்பதில்லை
காஞ்சிபுரம் - திருப்பதி நெடுஞ்சாலையில் வடமாம்பாக்கம், தணிகைபோளூர் மற்றும் கைனூர் ஊராட்சி மையப்பகுதியாக நாகாலம்மன் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. கைனூர், கைனூர் கண்டிகை, பாலகிருஷ்ணபுரம், முசல் நாயுடு கண்டிகை, வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம் மற்றும் வடமாம்பாக்கம் கண்டிகை பகுதிகளில் இருந்து அரக்கோணம், காஞ்சீபுரம், வேலூர், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு தினசரி அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி செல்லும் மாண- மாணவியர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கிராம மக்கள் இங்கு பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருப்பதால் இங்கு நிற்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்த வழியாக வரும் பஸ்களை நிறுத்துவதற்காக கை காட்டினாலும் நிற்காமலேயே சென்று விடுகிறது.
நின்று செல்ல வேண்டும்
இதனால் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்தது வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் வெளியூருக்கு பயணம் செல்பவர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணத்திற்கோ, 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தணிக்கோ செல்ல வேண்டுமானால் கூட ஆட்டோவை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது.
அட்டோ கட்டணம் அதிகம் என்பதால் தினசரி ஆட்டோவிலும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆட்டோக்கள் இரவு 7 மணிவரை மட்டுமே ஓடுகிறது. இதனால் இரவு நேரங்களில் தினமும் அச்சத்துடனேயே வர வேண்டியுள்ளது. எனவே அனைத்து பஸ்களும் இங்கு நின்று செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.