அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்- மத்திய மந்திரி எல்.முருகன்
சுதந்திர தினத்தையொட்டி அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தினார்.
நெல்லையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். இதையொட்டி அனைவரும் தேச பக்தியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். மேலும் பிரதமர் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடியை 3 நாட்கள் ஏற்ற வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஒண்டிவீரன் தபால் தலையை வெளியிட உள்ளோம். இந்த நிகழ்ச்சி நெல்லையில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு பணியை மிக தீவிரமாக எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். யாரும் அதைப்பற்றி கேள்வி கேட்பது இல்லை. அதேபோல கல்விக்கடன் ரத்து, நகை கடன் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தி.மு.க. அரசு செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்குமா? என்று கேட்கிறீர்கள், தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். அதனை அகில இந்திய தலைமை முடிவு செய்து அறிவிக்கும். ரஜினிகாந்த் தனது செல்போனில் தேசிய கொடி படம் வைத்துள்ளதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.