அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன்சேரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடங்கியுள்ளது. சளி, தலைவலி, இருமல், இருப்பவர்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் கட்டுப்படுத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெங்கு, ப்ளூ காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் எந்த பகுதியிலாவது 3-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருக்குமானால் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர். 1000 மருத்துவர்கள் காலி இடங்களை நிரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சூனம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வந்த பெண் வேறு இடத்திற்கு பரிந்துரை. மருத்துவர் பரிந்துரை அடிப்படையிலேயே செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
பிரசவத்தின் போது குழந்தை இறந்த விவகாரத்தில் மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிரசவ நேரத்தில் மருத்துவர் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.