அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேச்சு
சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடிைய பறக்க விட வேண்டும் என ஆய்வுக்ட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
ராணிப்பேட்டை,
சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடிைய பறக்க விட வேண்டும் என ஆய்வுக்ட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
ஆய்வுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது :-
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய கொடியினை 3 நாட்கள் பறக்க விட வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 288 ஊராட்சிகளில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் குடியிருப்புகளில் தேசிய கொடியை பறக்க விட தேசிய கொடியை வாங்கி ஒவ்வொரு வீடுகளுக்கும் கொடுக்க மகளிர் திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தேசியக்கொடிக்கு பணம் பெற்று கொடி வழங்க வேண்டும். இலவசமாக வழங்க கூடாது.
நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சத்து 35 ஆயிரம் வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதிகளில் உள்ள 23 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தேசியக்கொடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய கொடியை ஒவ்வொரு வீடுகளிலும் பறக்கவிட்டு அதனை வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
தேசிய கொடியை அவமரியாதை செய்யும் விதத்தில் ஏற்றுவதோ மற்ற செயல்களில் ஈடுபடுவதோ இருக்கக் கூடாது. இதனை அனைத்து துறை அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும்.
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
சீமை கருவேல மரங்கள்
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சீமை கருவேல மரங்களை விரைவாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட உரிமையாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அலுவலர்கள் அதை அகற்றிட நடவடிக்கை எடுத்து அதற்கான செலவினத்தை இடத்தின் உரிமையாளரிடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.