அகில இந்திய குண்டு எறிதல் போட்டியில்சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு
அகில இந்திய குண்டு எறிதல் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான அகில இந்திய அளவிலான குண்டு எறிதல் போட்டி நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தமிழகம் சார்பில் தூத்துக்குடியை சேர்ந்த ராகவானந்தம் மகள் பிரீத்தி சிவா பிச்சம்மாள் என்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி கலந்து கொண்டு விளையாடினார். இவர் அந்த போட்டியில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் நேற்று தூத்துக்குடிக்கு திரும்பினார். அவருக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே மாணவி பிரீத்தி சிவா பிச்சம்மாளுக்கு நடைபயற்சி மேற்கொள்வோர் சங்கம் சார்பில் மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, இந்திய அளவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்ச்சியில் நடைபயிச்சி மேற்கொள்வோர் சங்கத்தை சேர்ந்த யு.எஸ்.சேகர், கே.பழனிவேல், துரைசிங்கம், செல்லத்துரை, ஜெகன், மணிக்குட்டி, பிரபாகர், சண்முகம், லட்சுமணன், சந்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.